எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கையும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரும் வழக்கையும் ஒன்றாகத் தான் விசாரிக்க வேண்டுமா என உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞரும், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞரும் காரசார வாதத்தை முன்வைத்தனர்.
சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கும், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, சபாநாயகர் தனபால் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சபாநாயகர் தரப்பில் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் 500 பக்கங்களை கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக டிடிவி தினகரன் தரப்பு மீது சபாநாயகர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஆட்சியை கவிழ்ப்போம் என வெளிப்படையாகவே பேசியதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
பின்னர், டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தனது வாதத்தை தொடங்கினார். அப்போது அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் வாக்களித்ததாக அவர் தெரிவித்தார். பின்னர் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கையும், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடக்கோரும் வழக்கையும் ஒன்றாகத் தான் விசாரிக்க வேண்டுமா என தினகரன் தரப்பிற்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். தகுதி நீக்கமும், நம்பிக்கை வாக்கெடுப்பும் வெவ்வேறான விவகாரங்கள் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இதனையடுத்து சபாநாயகர் தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடும்போது, முதலில் நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கே தொடரப்பட்டது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பை வழக்கை தான் முதலில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எம்எம்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை தான் முதலில் விசாரிக்க வேண்டும் என்றார். மேலும் முதலமைச்சர் மீதுதான் நம்பிக்கையை இழந்தோமே தவிர ஆட்சி மீது அல்ல என்றார். இதனையடுத்து பேசிய நீதிபதி, எந்த வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்திற்கு தெரியும் என்றார்.