18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. இதனையடுத்து 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் எடுத்த முடிவில் தவறில்லை என்று 3-வது நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு டிடிவி தினகரன் அணியினருக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் அணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் எந்த நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.