டிரெண்டிங்

‘மன்மோகன் சிங்’ படக் குழுவினருக்கு பாதுகாப்பு கொடுங்கள் - உள்துறை அமைச்சருக்கு பாஜக கடிதம்

‘மன்மோகன் சிங்’ படக் குழுவினருக்கு பாதுகாப்பு கொடுங்கள் - உள்துறை அமைச்சருக்கு பாஜக கடிதம்

rajakannan

மன்மோகன் சிங் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தில் பணியாற்றியவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி, உள்துறை அமைச்சருக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது. 

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை அவரது ஊடக ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. இவர் ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் பிரபல நடிகர் அனுபம் கெர் நடிப்பில் ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’என்ற பெயரிலேயே திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில்‌ 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி அரசியலுக்கு மன்மோகன்சிங் பலிகடா ஆக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லருக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும் காங்கிரசுக்கு எதிராக இந்த ட்ரெய்லரை முன் வைத்து பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இந்தத் திரைப்படம் காங்கிரஸுக்கு எதிரான பரப்புரை என காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் தவறான தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்நிலையில், ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தில் நடித்துள்ள நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளருக்கு போலீஸ்  பாதுகாப்பு அளிக்கக் கோரி பாஜகவின் அலிகார் செய்தி தொடர்பாளர் நிஷிட் சர்மா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரால் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நிஷிட் சர்மா கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம் பொங்கலையொட்டி வருகின்ற ஜனவரி 11ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.