கல்யாண மாப்பிள்ளைகளுக்கென மார்கெட் ஒன்று இந்தியாவில் கிட்டத்தட்ட 700 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது எங்கு இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
பண்டைய காலங்களில் பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்ததும் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பதற்காக அலங்கரிக்கப்பட்டு வரிசைப்படுத்தி அமர வைத்து சுயம்வரம் நடத்துவார்கள். இதனை புத்தகங்கள், திரைப்படங்கள் வாயிலாக கேட்டறிந்திருப்போம்.
ஆனால் ஆண்களை வரிசைப்படுத்தி இருக்கச்செய்து அவர்களை திருமணம் செய்துக்கொள்ளும் மணப்பெண் வீட்டின் ஆண்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு 700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுவும் இந்தியாவின் பீகார் மாநிலத்தில்.
சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு பெயர் போன பீகாரின் மதுபனி என்ற மாவட்டத்தில்தான் இந்த நிகழ்வுகள் இன்றளவுன் நடந்து வருகிறது. அதற்கு சவுரத் சபா என பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது மாப்பிள்ளை மார்க்கெட்.
இந்த மாப்பிள்ளை மார்க்கெட்டிற்கு வரும் மணமகன்கள் வேஷ்டியும் குர்தாவும் அல்லது ஜீன்ஸ் பேண்ட்டும் ஷர்ட்டும் அணிந்திருக்க வேண்டும். சமூக தகுதிக்கு ஏற்ப அந்தந்த மாப்பிள்ளைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
மணமகன்களை தேர்வு செய்வதற்கு முன்பு பெண் வீட்டார் மாப்பிள்ளையின் படிப்பு, குடும்ப பின்னணி, பிறந்த தேதிக்கான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்த பிறகே அடுத்தகட்ட வேலைக்கு செல்வார்கள்.
பெண்ணுக்கு ஒருவரை பிடித்துப்போய் சரி என தலையசைத்து விட்டால் ஆண் வீட்டாரே திருமண பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையில் ஏழு தலைமுறைகளுக்கு இரத்த உறவுகள் மற்றும் ஒரே வகை இரத்தம் இருப்பது காணப்பட்டால் இங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விதிகளும் உள்ளது.
இந்த சவுரத் சபா கர்நாத் பரம்பரையைச் சேர்ந்த ராஜா ஹரி சிங் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், பிற கோத்ரங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த சவுரத் சபாவின் நோக்கமாக இருக்கிறது என மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், இந்த சவுரத் சபா மூலம் பெண்கள் தங்களுக்கான கணவனை தேர்வு செய்வதற்கான எளிமையான வழியாக இருந்தாலும், வரதட்சணை முறையை ஒழிப்பதற்காகவே முந்தைய காலத்தில் தொடங்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.
மைதிலி சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் அவர்களது பாதுகாவலர்கள் அல்லது உறவினர்களும் வருங்கால மணப்பெண்களால் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக மதுபானி மாவட்டத்தின் உள்ளூர் சந்தைப் பகுதியில் உள்ள பிப்பல் மரங்களின் கீழ்தான் கூடுவார்களாம்.
9 நாட்களுக்கு நடைபெறும் இந்த சவுரத் மேளா அல்லது சபாகச்சி என அழைக்கப்படும் மாப்பிள்ளை மார்க்கெட் மதுபனியின் பழத்தோட்டத்தில் அமைக்கப்படும். பீகாரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மைதிலி சமுதாயத்தினர் மதுபனியில் நடக்கும் மாப்பிள்ளை மார்க்கெட்டில் பங்கேற்பர்.
மணப்பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளுக்கு பொருத்தமான துணையை தேர்வு செய்யப்பட்டதும் திருமணத்திற்கான சடங்குகளை பஞ்சிக்காரர்கள் எனும் பதிவாளர்களை கொண்டு முடிப்பார்கள்.