அமைச்சர் பாண்டியராஜனை தொடர்ந்து அவதூறாக பேசிவரும் ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் நாசரின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் திமுக பொதுக்கூட்டத்தில் ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் நாசர், அதிமுக வேட்பாளரான பாண்டியராஜனை ஒருமையில் பேசியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினரை வைத்து அதிமுக வேட்பாளர் பாண்டியராஜன் குறித்து அவதூறாக ஆதாரமற்ற வகையில், தமிழகத்தில் நீட் தேர்வு வர அமைச்சர் பாண்டியராஜன் தான் காரணம் என துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனால் அதிமுகவினர்-நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆவடி தொகுதியில் தேர்தல் பரபரப்பு சூழல் நிலவுகிறது.
எனவே தேர்தல் விதிமுறைகளை மீறி தனிப்பட்ட நபரை தாக்கி பேசிய ஆவடி திமுக வேட்பாளர் நாசரின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்” என புகார் மனுவை அளித்துள்ளனர். மேலும் அவதூறாக பரப்புரை மேற்கொண்ட நாசரின் மேடை பேச்சின் காட்சி பதிவுகளை ஆதாரமாக கொடுத்துள்ளனர்.