டிரெண்டிங்

நீலகிரி தொகுதியின் நம்பிக்கை நாயகி 'அக்கம்மா தேவி'

நீலகிரி தொகுதியின் நம்பிக்கை நாயகி 'அக்கம்மா தேவி'

webteam

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை அக்கம்மா தேவி என்பவர் பெற்றார். படுகர் இனத்தைச் சேர்ந்த இவர் சத்தமின்றி பல சாதனைகளை படைத்துள்ளார்.

‌நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ல் அக்கம்மா தேவி பிறந்தார். படுகர் இனத்தைச் சேர்ந்த மோதா கவுடர் - சுப்பி தம்பதியின் ஏழு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் இவர். கல்வியின் மீதான தனது மகளின் ஆர்வத்தைக் கண்ட தந்தை, குன்னூரில் உள்ள புனித ஜோசப் கான்வென்ட்டில் சேர்த்துவிட, 5 மைல் தூரம் நடந்தே பள்ளி சென்றுள்ளார் அக்கம்மாதேவி‌. அவர் கல்லூரி பயின்றது‌ இரண்டாம் உலகப்போர் சமயம்‌. எனினும் தனது கல்லூரிக் கல்வியை திறம்படக் கற்று சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ந்து, படுகர் இன மக்களிலேயே முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.

1953 ஆம் ஆண்டு சரோஜினி வரதப்பன் அழைத்ததன்பேரில், காங்கிரஸ் கட்சியில் கால் பதித்துள்ளார் அக்கம்மாதேவி. 1962ல் நீலகிரியில் வேட்பாளராக அக்கம்மாவை காமராஜர் நிறுத்தினார். வெற்றி பெற்ற அங்கம்மா, தேயிலைத் தொழிற்சாலைகள்,முதல் மகளிர் கல்லூரி உள்ளிட்டவற்றை தன் தொகுதிக்கு கொண்டு வந்தார். அன்று அவர் கொண்டு வந்த கல்லூரியில் பயின்று பட்டதாரி ஆன படுகர் இனப் பெண்கள் ஏராளம்.

எம்பியாக இருந்த காலகட்டத்தில் அக்கம்மா தேவி பொதுக்கணக்கு குழுவின் உறுப்பினராக 2 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். மத்திய அரசின் பொதுக்கணக்கு குழுவில் இடம்பெற்ற ஒரே பெண் அக்கம்மா தேவிதான். அக்கம்மா தேவிக்குப் பிறகு நீலகிரி தொகுதியில் திமுகவின் மாதே கவுடர் எம்.பி. ஆனார். அதன் பிறகு இந்தத் தொகுதியில் பெண் எம்.பி.க்கள் யாரும் வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: The Federal