நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மூன்றாவது மிகப் பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. தனித்துப் போட்டியிட்டதும் அதற்கு காரணமாக கருதப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட அதிமுக எடுத்த முடிவு அக்கட்சிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியிருப்பது தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது. 2011ல் ஆட்சியைப் பிடித்ததும் அதிமுகவை மேலும் வலிமையான கட்சியாக ஜெயலலிதா உருவாக்கினார். அதன் பலனாக 2016ஆம் ஆண்டில் அதிமுகவை தனித்துப் போட்டியிடச் செய்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் முடிவு செய்தனர். அக்கூட்டணி 2019 மக்களவைத் தேர்தலை சந்தித்து படுதோல்வி கண்டது. அதைத் தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அடுத்து வந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு தோல்வியே தொடர்ந்தது.
இந்த நிலையில்தான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே தனித்துப் போட்டியிடப் போவதாக பாமக அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மாநகராட்சிகளில் பாஜக கேட்ட வார்டு எண்ணிக்கையை அதிமுக தர முன்வரவில்லை என்பதால் பாஜகவும் தனித்துப் போட்டி என அறிவித்து விட்டது.
இதைத்தொடர்ந்து அதிமுக 2016க்குப் பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட ஒரிரு சிறிய கட்சிகள் தவிர்த்து, தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. பல வார்டுகளில் அக்கட்சி திமுகவுக்கு அடுத்த இடத்தை இழந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இனி, 2024ல் வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி என்ற விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.