போயஸ் தோட்ட இல்லத்தின் முன் குவிந்த அதிமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். போலீசாரும் ஆயுதப்படையினரும் ஏராளமாக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக மட்டுமே இருப்பதாகவும் மற்றபடி வருமான வரித்துறை சோதனைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே சோதனை நடத்தப்படும் தகவல் அறிந்து அதிமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். சோதனையை எதிர்த்து அங்கு குவிந்த அதிமுக தொண்டர்கள் இரவு நேரத்தில் ஏன் சோதனை நடத்த வேண்டும்? என கேள்வி எழுப்பினர். மத்திய பாஜக அரசை எதிர்த்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சித்தனர். அந்த நேரத்தில் காவல்துறையினருக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.