டிரெண்டிங்

குஜராத்தில் விறுவிறு வாக்குப்பதிவு: வரிசையில் நின்று வாக்களித்தார் மோடி

குஜராத்தில் விறுவிறு வாக்குப்பதிவு: வரிசையில் நின்று வாக்களித்தார் மோடி

rajakannan

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் 14 மாவட்டங்களில் மொத்தம் 2.22 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 851 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று காலை முதலே மக்கள் விறுவிறுப்புடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வந்தனர். சில இடங்களில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில், பிரதமர் மோடி சபர்மதியில் உள்ள ரானிப் பகுதி வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் வெளியே வந்த அவர், மையிட்ட தனது கையினை உயர்த்தி அங்குள்ளவர்களுக்கு காட்டினார். மோடி பிரதமரான பின்னர் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இது. ஒரு பிரதமராக முதல் முறையாக குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அவர் வாக்களிக்கிறார். பிரதமர் மோடியின் தாய் ஹீராபின் காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

பாஜக தலைவர் அமித் ஷா அகமதாபாத்தில் உள்ள நரன்புராவிலும், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அகமதாபாத் நகரில் உள்ள வேஜல்புரிலும் வாக்களித்தனர். குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் கட்லோடியா பகுதியிலும், துணை முதலமைச்சர் நிதின் படேல் மெஹசனா மாவட்டத்தில் உள்ள கடி தொகுதியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பாரத்சிங் சோலங்கி ஆனந்த் பகுதியிலும், கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் வகேலா காந்தி நகரின் வாசன் கிராமத்திலும் வக்களித்தனர். பட்டிதார் அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் விரம்கம் பகுதியில் வாக்களித்தார்.