டிரெண்டிங்

பேரம் பேசப்பட்டது உண்மைதான்: எம்எல்ஏ மனோகரன் ஒப்புதல்

பேரம் பேசப்பட்டது உண்மைதான்: எம்எல்ஏ மனோகரன் ஒப்புதல்

webteam

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணிக்கு செல்லாமல் இருக்க தன்னிடம் 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக வாசுதேவநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் மனோகரன் கூறியுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினரின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய இவர் இவ்வாறு கூறினார். "ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டன் என்பதால் எதிரணியின் அழைப்பை நிராகரித்துவிட்டேன்" என அவர் கூறினார். வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க சிவகாசி வரும் நிலையில், அவருக்கு அளிக்கப்படவுள்ள வரவேற்பு குறித்து ஆலோசனை செய்வதற்காகவும், நிர்வாகிகள் இணைந்து செயல்படுவது குறித்தும் ராஜபாளையத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக வாசுதேவநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, "சசிகலா தலைமையிலான அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் தனியாக பிரிந்த போது, அவர் அணிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக என்னிடம் 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது. அதற்கு உடன்பட்டால் அம்மாவை கொன்றவர்களில் நானும் ஒருவனாகி விடுவேன் என்பதால் அதற்கு உடன்படவில்லை.

சொத்துக் குவிப்பு வழக்கில் அம்மா சிறை சென்ற போது, போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் ஒருவரும், சசிகலா சிறைக்கு சென்ற போது எதுவும் செய்யவில்லை. அவரிடம் அதிமுகவினருக்கு விசுவாசம் இல்லை. தற்போது 4 வருட காலம் ஆட்சி இருப்பதால் பணத்திற்காக உடன் இருக்கின்றனர். 122 எம்.எல்.ஏ க்களும் தலைமைக்கும் விசுவாசமாக இல்லாமல், மக்களுக்கும் விசுவாசமாக இல்லாமல் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயரை உருவாக்குகின்றனர். தற்போது கட்சிக்கும், ஆட்சிக்கும் மக்களிடம் மதிப்பு இல்லாமல் போய் விட்டது.

விரைவில் ஆட்சி கலைக்கப் பட வேண்டும். பொதுத் தேர்தல் வர வேண்டும். தகுதியுடைய தலைவரான ஓ.பி.எஸ். முதல்வராக வர வேண்டும். சசிகலாவுக்கு தகுதி இல்லை என்பதாலேயே ஜெயலலிதா அவரை அரசியலில் ஈடுபட விடவில்லை. ஜெயலலிதாவால் விலக்கப் பட்ட அனைவரும் அவரது மறைவுக்கு பின்னர் இணைந்ததோடு மட்டுமல்லாமல் கட்சியை கட்டுப் பாட்டுக்குள் வைத்துள்ளனர். கட்சிய மீட்க போராடும் ஓ.பி.எஸ் அவர்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன், அவருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்." என்றும் நிர்வாகிகளை எம்.எல்.ஏ. மனோகரன் கேட்டுக்கொண்டார்.