டிரெண்டிங்

அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத்தாக்கல்

அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத்தாக்கல்

webteam

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளிட்ட 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுகுதிகளில் நேரிடையாக போட்டியிடுகிறது. இந்த 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அதிமுக வேட்பாளர்கள் தங்கள் பரப்புரையை தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நேற்று முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

தேனி தொகுதியில் போட்டியிட இருக்கும் மகனை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கியுள்ளார். மேலும் நேற்று சேலத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையை தொடங்கினார். 

இதனிடையே வேட்பு மனுத்தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டு பலர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை. 

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் நாளை நண்பகல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை ஒரே நேரத்தில் அதிமுக வேட்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது வழக்கமான ஒரு நடைமுறையாகவே அதிமுகவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதே போல் திமுக வேட்பாளர்கள் வரும் 25 ஆம் தேதி வேட்புமனுத் தாக்‌கல் செய்வார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.