முதல்வர் பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மனம் திறந்து மன்னிப்பு கோருவதாக திமுக எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார்.
இன்று நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது,“ எனது பேச்சால் முதல்வர் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தியை செய்திதாள்கள் வழியாக கேட்டு மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்துகொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமென்றால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்கு அல்லாமல், உள்ள படியே காயப்பட்டிருப்பதாக உணர்வாரேயானால் என மனம் திறந்த மன்னிப்பை கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை. எனது பேச்சு இரண்டு தலைவர்களை பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல. பொதுவாழ்வில் இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடும் ஒப்பீடும்தான்.” என்றார்.
முன்னதாக, திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா முதல்வரின் தாயார் குறித்து பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. அதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆ.ராசாவின் பேச்சுக்கு ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆ.ராசாவும் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று திருவொற்றியூரில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆ.ராசாவின் விமர்சனம் குறித்து பேசிய போது நா தழுதழுக்க கண்கலங்கினார்.