நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் - ஒழுங்கை பேணி காக்க ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
268 வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் அறைக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரில் மட்டும் 2,723 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா நோயாளிகள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறினார்.