டெக்

விரைவில் வருகிறது வாட்ஸ் அப்பில் ''ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்''!

விரைவில் வருகிறது வாட்ஸ் அப்பில் ''ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்''!

webteam

பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் விதத்தில் ''ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்'' அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை செய்து வருகிறது

உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  பேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயலியை உலகம் முழுவதிலும் 1.3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது வாட்ஸ் அப் அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. 

இந்நிலையில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் விதத்தில் 'ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்' அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை செய்து வருகிறது.  பயனாளர்கள் விரல் ரேகையை பதிவு செய்து தனது வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் விதத்தில் இந்த அப்டேட் கொண்டு வரப்பட உள்ளது. தற்போது வாட்ஸ் அப்பின் பீட்டா வெர்சன் 2.19.83ல் செயல்படுத்தப்பட்டு சோதனையில் உள்ளது. 

இந்த வசதியை 2.19.83 பீட்டா வெர்சன் பயனாளர்கள் மட்டும் தற்போது பெற முடியும். அதன்படி Settings >Account >Privacy > Use Fingerprint to Unlock என்ற ஆப்ஷனை பயன்படுத்தி இந்த அப்டேட்டை பெறலாம். ஒரு முறை விரல் ரேகையை பதிவு செய்தால் போதுமானது. வாட்ஸ் அப் கணக்கு தானாகவே லாக் ஆகும் வசதியும் இதில் உள்ளது. அதன்படி எவ்வளவு நேரத்தில் லாக் ஆக வேண்டும் என்ற ஆப்ஷனையும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

விரல் ரேகையை முதல் தடவையிலேயே சரியாக கணக்கிட முடியாமல் வாட்ஸ் அப் திணறுவதாகவும், பலமுறை முயற்சி செய்ய வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது சோதனை முயற்சியில் மட்டுமே இருப்பதால் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, பாதுகாப்பு அம்சமான இந்த ‘ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்’ விரைவில் வாட்ஸ் அப்பின் அதிகாரப்பூர்வ அப்டேட்டாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ போன் பயனாளர்கள் டச் ஐடி, பேஸ் ஐடி போன்ற பாதுகாப்பு அம்சங்களை ஏற்கெனவே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.