சனிக் கோளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட கேஸினி விண்கலம் தனது பணிகளை முடித்துக் கொண்டு, தன்னைத்தானே அழித்துக் கொள்ள இருக்கிறது.
13 ஆண்டுகாலம் சனியை ஆய்வு செய்த கேஸினி ஏராளாமான புதிய தகவல்களை அளித்திருக்கிறது. சனிக்கோள் பற்றிய விஞ்ஞானிகளின் புரிதலை மேம்படுத்துவதற்கும் உதவியிருக்கிறது. கடைசியாக சனிக்கோளைச் சுற்றியுள்ள பட்டைகளுக்கு இடையே பயணம் செய்தது. இதையடுத்து, சனிக்கோளின் வளிமண்டலப் பரப்பில் மணிக்கு சுமார் 1.2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதிச் சிதற இருக்கிறது.
இந்நிலையில் கேஸினி விண்கலத்தின் சிறப்புகளை பார்க்கலாம்.
பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்களோ பிற உயிர்களோ வசிக்க முடியுமா என்பது குறித்த ஆய்வு பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்டது. இதுபோன்ற ஆய்வுகளுடன் தொடர்புடைய விண்கலம் கேஸினி. சூரிய குடும்பத்தில் ஆச்சரியம் நிறைந்த சனிக்கோளை ஆய்வு செய்வதற்காக அனுபப்பட்டது கேஸினி விண்கலம். உலகின் பல முன்னோடி விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அமெரிக்காவின் நாசா அமைப்புடன், ஐரோப்பிய - இத்தாலிய விண்வெளி அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய விண்கலம் இது. சுமார் இருபது ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு 1997-ம் ஆண்டில் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட கேஸினியுடன் ஹைஜென்ஸ் என்ற தரையிறங்கும் அமைப்பும் இணைத்து அனுப்பப்பட்டது.
சனிக் கோளைச் சுற்றியுள்ள வளையங்களின் தன்மை, அதன் வளிமண்டலம், சனியின் துணைக்கோள்களின் இயல்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதுதான் கேஸினி விண்கலத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்காக பல நவீன தொழில்நுட்பங்கள் இந்த விண்கலத்தில் சேர்க்கப்ட்டன. சனிக் கோளைச் சுற்றிய பகுதியில் கிடைக்கும் குறைந்த சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதற்கு, பிரமாண்டமான சூரிய மின்சக்தித் தகடுகள் தேவை. இவற்றை விண்கலத்தில் இணைப்பது சாத்தியமில்லை என்பதால், ப்ளூடோனியம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் கேஸினியில் சேர்க்கப்பட்டது. இதற்காக 33 கிலோ ப்ளூடோனியம் டை ஆக்ஸைடு விண்கலத்தில் வைக்கப்பட்டது. விண்கலம் அனுப்பப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பிறகும் 600 முதல் 700 வாட்ஸ் மின்சாரத்தை தயாரிக்கும் திறனை கேஸினி பெற்றிருப்பதற்கு இதுவே காரணம்.
அனுப்பப்பட்ட 7 ஆண்டுப் பயணத்துக்குப் பிறகே சனிக் கோளின் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது கேசினி. இந்த சாதனையைச் செய்த முதலாவது விண்கலம் என்ற பெருமை இந்த விண்கலத்துக்குக் கிடைத்தது. இதன் பிறகு சனியின் மிகப் பெரிய துணைக் கோளான டைட்டானில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹைஜென்ஸ் விண்கலத்தை கேஸினி விடுவித்தது. ஒரு மாத காலம் டைட்டானைச் சுற்றிய ஹைஜென்ஸ், 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாரசூட் மூலம் டைட்டானின் தரையில் இறங்கியது. சூரியகுடும்பத்தின் வெளிக் கோள் ஒன்றில் விண்லகம் ஒன்று தரையிறக்கப்பட்டது அதுவே முதல் முறை.
சனிக்கோளைச் சுற்றி வரும் பணியைத் தொடர்ந்த கேஸினி, அதன் மற்றொரு துணைக் கோளான என்செலடஸின் அடிப்பரப்பில் கடல் இருப்பதை கேஸினி கண்டறிந்து கூறியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாசா விண்வெளி அமைப்பு இதை உறுதி செய்தது. வேற்றுக் கிரக உயிர் வாழ்க்கைக்கு உகந்த இடங்களுள் ஒன்றாக இந்தக் கோள் கருதப்படுவதால், கேஸினியின் கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வில் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அந்தக வகையில், 2017-ம் ஆண்டு தனது ஆயுளை முடித்துக் கொள்ளப் போகும் கேஸினி, பல வருங்கால ஆய்வுத் திட்டங்களுக்கான தொடக்கப் புள்ளியாகவும் மாறியிருக்கிறது.