ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 58 வகையான பணிகளுக்கு இனி ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லத் தேவை இல்லை. ஆன்லைன் முறையிலேயே இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை ஓர் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப் பதிவு, வாகன பர்மிட், பெயர் மாற்றம் உள்ளிட்ட 58 வகையான பணிகளை பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம். இதன்மூலம், வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வரவேண்டிய தேவை இருக்காது என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத் துறை தொடர்பான பணிகளை பொதுமக்கள் எளிதாக மேற்கொள்ளும் வகையில் பல வசதிகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்மூலம், சேவைகளை மேற்கொள்ள தொடர்புடைய போக்குவரத்துத் துறை அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வரத் தேவை இல்லை. இதனால் அவர்களுக்கு ஏற்படும் சிரமம் குறைவதுடன், காத்திருக்கும் நேரமும் மிச்சமாகும்.