சூரியனின் சுற்றுப்புறம் குறித்து ஆராய்வதற்காக நாசா அனுப்ப இருந்த விண்கலம் பயணம் திடீர் என ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சூரியனின் சுற்றுப்புறம் குறித்து ஆராய்வதற்காக நாசா அனுப்பும் பார்க்கர் விண்கலம் இன்று புறப்படவிருந்த நிலையில் அதன் பயணம் 24 மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தில் இருந்த பாதுகாப்பு அலாரம் திடீரென ஒலித்ததை அடுத்து பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும் பயண ஒத்திவைப்புக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. பார்க்கர் என்ற பெயர் கொண்ட விண்கலம் இன்று ஃப்ளோரிடா மாகாணம் கேப் கேனவரலில் இருந்து புறப்படுவதாக இருந்த நிலையில் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்டா 4 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் அனுப்பப்பட உள்ளது. சூரியனின் சுற்றுப்புறம் குறித்து விரிவான ஆய்வை இந்த விண்கலம் நடத்தும். சூரியனின் வெப்ப வீச்சால் பாதிக்கப்படாமல் இருக்க நான்கரை அங்குலம் தடிமன் கொண்ட பிரத்யேக தடுப்பு பலகை விண்கலத்தை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ளது. சூரியனுக்கு 61 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இந்த விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.