டெக்

2060-க்குள் ஓசோன் ஓட்டை சரியாகும்: நாசா உறுதி

2060-க்குள் ஓசோன் ஓட்டை சரியாகும்: நாசா உறுதி

webteam

ஓசோனில் அண்டார்டிகாவிற்கு மேலே விழுந்த ஓட்டை சிறிது சிறிதாக குறைந்து வருவதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் டிஎன்ஏ குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது ஓசோன் படலம். ஓசோனை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16 ஆம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐநா அறிவித்துள்ளது. ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளதை கண்டறிந்தார்.

1970-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் சிஎஃப்சி என்று கூறப்படும் குளோரோ புளூரோ கார்பன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வேதியல் புகைகளால் ஓசோன் படலம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பது கணடறியப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. அதாவது, குளிர்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்டவைகளில் இருந்து வெளிவரும் சிஎஃப்சி வாயுகளே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. பின்னர், இதுபோன்ற கருவிகளை மாற்றி வடிவமைத்து தற்போது பயன்படுத்தி வருகிறோம். அண்டார்டிகா கண்டத்தின் மேலே அமெரிக்க கண்டத்தின் அளவிற்கு ஓசோன் படலத்தில் ஓட்டை இருக்கிறது. புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவதற்கும் இதுவே காரணமாக கூறப்படுகிறது. 

நாசா வெளியிட்ட அறிக்கையில், ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டையின் அளவு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஐநாவின் மாண்ட்ரியல் ஒப்பந்தத்தின் படி உலக நாடுகள் சிஎஃப்சி வாயுகள் வெளியிடும் சாதனங்களை படிப்படியாக குறைத்தே ஓசோன் ஓட்டையின் அளவு குறைவதற்கு காரணமாக கூறுகின்றனர். மேலும் ஒரு புதிய ஆய்வில், அண்டார்டிகாவில் குளோரின் அணுக்களின் அளவு ஆண்டிற்கு 0.8 சதவீதம் குறைந்து வருவதாகவும், பருவ நிலை காரணமாக இனிவரும் ஆண்டுகளில் இந்தச் சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக ஓசோனில் ஓட்டை விழுவதற்கான காரணிகள் 20 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 2060 ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக ஓசோன் ஓட்டை சரியாகிவிடும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.