டெக்

பேச்சு மூச்சு இல்லாமல் முடங்கிய ஜியோ : வாடிக்கையாளர்கள் பதட்டம்

பேச்சு மூச்சு இல்லாமல் முடங்கிய ஜியோ : வாடிக்கையாளர்கள் பதட்டம்

webteam

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் போன் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே ஜியோ சிம் நிறுவனம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றது. அதற்குக் காரணம் அன்லிமிடெட் 4ஜி இணைய சேவை இலவசம் என்பதால்தான். ஜியோவின் வருகைக்குப் பிறகு மற்ற சிம் நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்தன. பல நிறுவனங்கள் ஜியோவின் இலவச இணைய சேவை ஆஃபர் முடியும் வரை நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை. சில சிம் நிறுவனங்கள் ஜியோவிற்கு இணையாக ஆஃபர் வழங்கும் திட்டங்களில் இறங்கினர்.

ஜியோ சீக்கிரமாக வாடிக்கையாளர்களை சென்றடைந்ததற்கு காரணம் இலவச இணைய சேவை மட்டுமின்றி, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்ற வசதியும்தான். ஜியோவின் வருகைக்குப் பிறகு இந்திய அளவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து என ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. அத்துடன் செல்போனில் பேசுவோரின் எண்ணிக்கையும், நீண்ட நேரம் பேசுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதற்கு காரணம் இலவச செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் ஜியோவின் வசதிதான். 

இந்நிலையில் ஜியோ சிம் நிறுவனத்தை பயன்படுத்துவோருக்கு சரியாக சிக்னல் கிடைப்பதில்லை, சப்-வேக்களில் சிக்னல் கிடைப்பது சிரமமாக உள்ளது என்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டது. அத்துடன் அவ்வப்போது ஜியோ நிறுவனத்தில் செல்போன் இணைப்புகள் முடங்கியதாகவும் குறை கூறப்பட்டன. இந்நிலையில் தற்போது தமிழக அளவில் ஜியோ செல்போன் அழைப்பு முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பலரும் செல்போன் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். இந்த அழைப்பு சேவை சிக்கல் சில மணி நேரங்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது.