என்னது.. செயற்கைக்கோள் மரத்தால் செய்றாங்களா.. கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா.. நீண்ட காலமாக நாம் பார்த்து வரும் செயற்கைக்கோள்கள் அனைத்து அலுமினியத்தால் செய்யப்படுபவை. கிட்டதட்ட தற்போது 5000 செயற்கைக்கோள்கள் பூமிக்கு வெளியே வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் தற்போது புதிதாக மர செயற்கைக்கோள்களை அறிமுகம் செய்ய அறிவியல் உலகம் தயாராகிவிட்டது.
ஜப்பானிய விஞ்ஞானிகள் மற்றும் நாசா விஞ்ஞானிகள் இணைந்து மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய லிக்னோசாட் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். இனி வரும் காலங்களில் இத்தகைய மரத்தால் உருவாக்கப்படும் செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளனர். விரைவில் உலகின் முதல் மர செயற்கைகோளை ஜப்பான் விண்ணில் செலுத்த உள்ளது.
இது குறித்து Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி, Postdoctoral researcher, Trottier Space Institute at McGill, Montreal Canada இவர் நமக்கு அளித்த விளக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.
”லிக்னோசாட் என்ற செயற்கைகோளானது மாக்னோலியா மரத்தைக்கொண்டு உருவாக்கியுள்ளனர். ஏன் மரத்தாலான செயற்கைகோளை உருவாக்க முயற்சித்துள்ளனர் என்றால்,
விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கை கோள்கள் தனது ஆயுட்காலத்தை முடித்துக்கொண்டு அங்கேயே சுழன்றுக்கொண்டிருந்தன. இதனால் விண்வெளியில் அதிகளவு குட்பைகள் சேரத்துவங்கின. அதன்பின் ஆராய்சியாளர்கள் இந்த குப்பைகளை அழிக்கும் பொருட்டு, வளிமண்டலத்திற்குள் காலாவதியான செயற்கைகோள்களை கொண்டுவந்து அதை எரித்து பிறகு கடலில் விழச்செய்கின்றனர். இதில் செயற்கை கோளானது முழுவதும் அலுமினியத்தால் செய்யப்படுவதால், இத்தகைய செயற்கைக்கோள் வளிமண்டலத்தை அடைந்து எரியும் பொழுது அதில் இருக்கும் அமலுமினா துகள்கள் வளிமண்டலத்தில் மிதக்கும். இந்த அலுமினிய துகள்களால் ஓசோன் படலத்திற்கு மட்டுமல்லாமல் பூமியின் சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்று என்று ஜப்பானிய விண்வெளி வீரரும் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி பொறியாளருமான Takao Doi சமீபத்தில் எச்சரித்தார்.
இறுதியாக ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுமிட்டோமோ ஃபாரெஸ்ட்ரி என்ற நிறுவனமும் இணைந்து, மரக்கட்டைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்தி செயற்கைகோள்களை உருவாக்க திட்டமிட்டது. அதன்படி பல்வேறு மர ஆராய்ச்சியின் முடிவில் மாக்னோலியா மரமானது இதற்கு தகுதியானதாக இருந்தது. அதனடிப்படையில் இப்பொழுது லிக்னோசாட் செயற்கைகோள் மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயற்கை கோளை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) மேற்கொள்ளப்பட்ட பலகட்ட சோதனைகளில், இறுதியாக நிலையானதாகவும் விரிசலை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் கண்டறியப்பட்டது.
இப்படி மரத்தினால் செய்யப்படுகின்ற செயற்கைக்கோளானது காற்று, புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில், மக்காது மற்றும் அழுகாது என்பதையும் கண்டறிந்துள்ளனர். மேலும் தனது ஆயுட்கால முடிவில் வளிமண்டல உரசலில் எரிந்து சாம்பலாகிவிடும். எரியும் பொழுது அதிலிருந்து கார்பண்டை ஆக்ஸைடு மட்டுமே வருவதால் வளிமண்டலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் ” என்று கூறியுள்ளார்.
1957 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தால் ஸ்புட்னிக் 1 என்கின்ற முதல் செயற்கைக்கோள் விண்வெளியில் செலுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் பூமியை சுற்றி இருக்கும் கோளப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. 50 நாடுகளின் செயற்கைக்கோள்கள் இதுவரை விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்தாலும், அவற்றை வானில் செலுத்தும் ஆற்றல் பத்து நாடுகளுக்கு மட்டுமே இதுவரை உள்ளது. ஒரு சில நூறு செயற்கைக்கோள்கள் மட்டும் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளன. மற்றவை, முழுதான செயற்கைக்கோள்களாகவோ, அல்லது ஆயிரக்கணக்கான சிறு சிறு துண்டங்களாகவோ உபயோகமே இல்லாமல் விண்வெளியில் பூமியின் கோளப்பாதையை சுற்றி வருகின்றன. இவற்றுக்கு விண்வெளிக் குப்பை என்ற பெயரும் உண்டு.