Chandrayaan 3 Rover PT web
டெக்

3 இலக்குகளுடன் செயல்படுத்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்: 2ல் வெற்றி.. இன்னொன்று? இஸ்ரோ சொன்னது என்ன?

சந்திரயான் 3 திட்டம், 3 இலக்குகளுடன் செயல்படுத்தப்பட்டதாகவும் அதில் 2 இலக்குகள் நிறைவடைந்துவிட்டதாகவும், 1 இலக்கு எஞ்சியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Prakash J

விண்ணில் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23 மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றதுடன், அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது.

நிலவில் 8 மீட்டர் பயணித்த ரோவர் Chandrayaan3 | ISRO | MissionMoon | VikramLander | PragyanRover

பின்னர், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது. நிலவில் சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் நிலவின் தரையில் 8 மீட்டர் தூரம் நகர்ந்து சென்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சந்திரயான் விண்கலத்தின் அனைத்துக் கருவிகளும் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து, சந்திரயான் 3 திட்டம், 3 இலக்குகளுடன் செயல்படுத்தப்பட்டதாகவும் அதில் 2 இலக்குகள் நிறைவடைந்துவிட்டதாகவும், 1 இலக்கு எஞ்சியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தெரிவித்துள்ள பதிவில், ”சந்திரயான் 3 திட்டத்தின் 3 இலக்குகளில் 1வது இலக்கான நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான, மென்மையான தரையிறங்குதல் நிறைவடைந்துவிட்டது.

2வது இலக்கான, நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்துசெல்லும் இலக்கு நிறைவடைந்துவிட்டது. நிலவின் தென்துருவத்தில் அறிவியல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்தல் 3வது இலக்கு. அந்த பணி நடைபெற்று வருகிறது. சந்திரயான்3 விண்கலம், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” எனப் பதிவிட்டுள்ளது.