Iphone 15 Pro  Twitter
டெக்

VideoCall கூட பேச முடியல; தொட முடியாத அளவுக்கு ஹீட் ஆகுது- iPhone 15 பற்றி புகார் எழுப்பும் பயனர்கள்

போன்கால் பேசும் போதும், விளையாடும் போதும், வீடியோ கால் பேசும் போது கூட அதிகமாக சூடாகிறது என IPHONE 15 Pro குறித்து பயனர்கள் தொடர் புகார் எழுப்பி வருகின்றனர்.

Rishan Vengai

உலகில் இருக்கும் மொபைல் விரும்பிகள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த iphone 15 ப்ரோ வகை மொபைல்போன் கடந்த செவ்வாய் அன்று வெளிவந்தது. முந்தைய iphoneகளின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளைவிட அதிக திறனோடு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாதல், பயனர்களிடையே இது அதிக கவனம் பெற்றது. குறிப்பாக டைட்டானியம் வகை மெட்டல் பாகமும், கேமரா மற்றும் ப்ராசசர் போன்றவையும் மிக அதிக திறனோடும் முதல்முறையாக டைப் சி சார்ஜர் இணைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

IPHONE 15 Pro மற்றும் IPHONE 15 Pro Max மொபைல்போன்கள் அறிமுகமாகி ஒரு வாரமே ஆகிய நிலையில், பயனர்களிடமிருந்து அதிகப்படியான புகார்கள் குவிந்து வருகின்றன. எக்ஸ் வலைதளங்களில் பதிவிடும் பல பயனரக்ள் மொபைல் போன் சாதாரணமாக ஸ்க்ரால் செய்தால் கூட அதிகப்படியான வெப்பத்தை வெளியிடுவதாகவும், சில பயனர்கள் சார்ஜ் போடும் போது இதுவரை பார்க்காத அளவிற்கு வெப்பமடைவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதிகப்படியாக வெப்பமாவதற்கு என்ன காரணம்?

மொபைல் போன் வெப்பமடைவது சாதாரண ஒன்றாக இருந்தாலும், மற்ற ஐபோன்களை விட ஏன் இந்த மொபைல் போன்கள் அதிக வெப்பமடைகின்றன?, இந்த பிரச்னை தொடருமா நின்றுவிடுமா? என்ற கேள்விகள் மட்டும் அதிகமாக எழுகின்றன.

Iphone 15 Pro

மற்ற ஐபோனை விட IPHONE 15 Pro மற்றும் IPHONE 15 Pro Max அதிக வெப்பமடைவதற்கு இரண்டு காரணங்களை பயனர்கள் அடுக்குகின்றனர். அதில், “ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இரண்டிலும் புதிய A17 சிப் பயன்படுத்தப்படுகிறது என்றும், அது அதிக சக்திவாய்ந்த கிராபிக்ஸ் எஞ்சினுடன் செயல்படுகிறது. கேமிங் செயல்திறனை மேம்படுத்த உதவும் இந்த கூறானது அதிகவெப்பமாவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்” என்றும், “சமீபத்திய ஐபோன் மாடலில் புதிய வகையிலான டைட்டானியம் பிரேம் உள்ளது. மொபைலின் எடையை குறைக்க பயன்படுத்தப்படும் இந்த பிரேம் அதிக வெப்பத்தை கடத்துகிறது” என்றும் தெரிவித்துவருகின்றனர். இதற்கு முன்னதாக ஆப்பிள் ஐபோன்களில் துருப்பிடிக்காத ஸ்டீலைப் பயன்படுத்தியது.

Iphone 15 Pro

இதுகுறித்து பேசியிருக்கும் ஆப்பிள் பகுப்பாய்வாளர் ஒருவர், "மொபைலின் எடையை குறைப்பதற்காக செய்யப்பட்ட மாற்றம் தான் இதற்கு முதன்மை காரணம் என நினைக்கிறேன். எடையை குறைப்பதற்காக குறைந்த வெப்பச் சிதறல் பகுதி மற்றும் டைட்டானியம் சட்டம் பயன்படுத்தியது போன்றவை வெப்ப செயல்திறனை எதிர்மறையாக பாதிக்கிறது. இதனால் ஏற்பட்ட பிரச்னையாக இருக்கலாமே தவிர சிப் வைத்ததால் ஏற்படும் வெப்பமாக இருக்கிறது. எப்படியிருப்பினும் இதை சரிசெய்யவில்லை என்றால் மொபைல்போன்களின் விற்பனை பாதிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

ரொம்ப சூடானா அடுப்பா பயன்படுத்துங்க! அதிகமாகும் ட்ரோல்கள்!

மொபைல் போன் வெப்பமவடைவது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் நபர் ஒருவர், “உங்கள் ஐபோன் 15 ப்ரோ அதிகமாக வெப்பமானால் அடுப்பாக பயன்படுத்துங்கள் என்பது போல் புகைப்படத்தை” பதிவிட்டுள்ளார்.

மேலும் “ஒருவர் அதிகப்படியான வெப்பம் அடைவதால் மொபைல்போன் தானாக ஆஃப் ஆகிவிடுகிறது. ஆன் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் "நான் சோசியல் மீடியாவை பயன்படுத்தும்போதே, அது எரிகிறது" என்றும், மற்றொருவர் “பேக் கேஸ் உருகிவிடும் அளவிற்கு சூடாகிவிட்டது” என்று எழுதியுள்ளார்.