தெலுங்கானாவில் மெக்கானிக்கல் பொறியியல் மாணவர்கள் ஏசி ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளனர்.
தெலுங்கானாவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016ஆம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் படித்த மாணவர்கள் காஸ்தப் காந்தின்யா, ஸ்ரீகாந்த் கொம்முலா மற்றும் ஆனந்த் குமார். இவர்கள் வெயில் நேரத்தில் குளிர்ந்த காற்றை வெளியிடும் மற்றும் குளிர்காலங்களில் சற்று மித சூடான காற்றை வெளியிடும் ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளனர். இது இரண்டு ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மணி நேரத்திற்கு செயல்படும் பேட்டரி கொண்ட ஹெல்மெட்டின் விலை ரூ.5,000 ஆகும். 8 மணி நேரத்திற்கு செயல்படும் பேட்டரி கொண்ட ஹெல்மெட் விலை ரூ.5,500 ஆகும்.
இந்த ஹெல்மெட் இந்திய கடற்படை விமானி ஒருவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. முதற்கட்டமாக 1,000 ஹெல்மெட்களை தயாரித்து வரும் மார்ச் மாதம் வெளியிடுகின்றனர். இதுதவிர 2018 பையோ ஏசியா நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ள தெலுங்கானாவின் அரசியல்வாதி கே.டி.ராமாராவுக்கு ஒரு ஹெல்மெட்டை பரிசளிக்கவுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் போக்குவரத்துக் காவலர்களுக்கு 20 ஹெல்மெட்களை அன்பளிப்பாக வழங்குகின்றனர்.