டெக்

110 கோடி இளைஞர்களின் செவித்திறன் பாதிப்பு: காரணம் ஹெட்போன்?

110 கோடி இளைஞர்களின் செவித்திறன் பாதிப்பு: காரணம் ஹெட்போன்?

rajakannan

நாம் பயன்படுத்தும் ஹெட்போன்களே காதுகளை செவிடாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சினிமா பாடல்களை கேட்பதற்கு மிகவும் அரிதானதாக காலம் ஒன்று இருந்தது. திருவிழாக்களில் மைக் கட்டி பாடல்கள் போடும் போதுதான் நமக்கு இஷ்டமான பாடல்களை கேட்போம். எம்பி3 பாடல்களின் வருகை எல்லாவற்றையும் மாற்றியது. பின்னர் செல்போன்களின் வருகையால் ஆயிரம் பாடல்களை கூட வைத்து கேட்கும் நிலை உருவாகிவிட்டது. இயர்-போன்களின் பயன்பாடு இன்னும் கூடும் வரப்பிரசாதமாக இருந்தது. இன்று சாலையில் பலரும் இயர் போனில் பாடல்களை கேட்டபடிதான் செல்கிறார்கள். வண்டியில் செல்லும் போது இயர்-போனில் பாடல்களை கேட்டுச் செல்கிறார்கள். அந்த அளவிற்கு இயர்-போனில் பயன்பாடு இன்றியமையாததாகிவிட்டது.

ஆனால், நாம் பயன்படுத்தும் இயர்-போன்களே நமக்கு அபாயமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிக வால்யூம் வைத்து பாடல்கள் கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும் என்பதை பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, உலக சுகாதார நிறுவனம் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பற்ற இயர்-போன்களை பயன்படுத்தியதால் 110 கோடி இளைஞர்களின் செவித்திறன் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 12-35 வயதுக்குட்பட்டவர்களுக்குதான் பாதிப்பு அதிகம். இது 2015ஆம் ஆண்டு வெளியான அறிக்கை. அதிக வால்யூம் வைத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் இயர் போனில் பாடல்கள் கேட்டால் செவித்திறன் பாதியளவு குறைவதை உணர முடியும். 

பிரச்னை இசையை கேட்பதிலோ அல்லது இயர்-போனிலோ இல்லை. அதிக வால்யூம் வைத்து பாடல்களை கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 85 டெசிபல் அளவிற்கும், 15 நிமிடங்களுக்கு 100 டெசிபல்ஸ் அளவிற்கு இசையை கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும். தற்போது சந்தையில் கிடைக்கக் கூடிய இயர்-போன்கள் அனைத்தும் 120 டெசிபல் கொண்டவை” என்று தெரிவித்துள்ளது.

இன்று தெருவோரங்களில் கூட 30 அல்லது 40 ரூபாய்க்கு கூட இயர் போன் கிடைக்கிறது. சிறிய கடைகளில் குறைந்தது 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், தரமானவையாக அவை இருக்கின்றதா என்பது யாருக்கு தெரியும். பிராண்டட் நிறுவனங்களின் இயர் போன்களே அதிக வால்யூம் வைத்து கேட்க கூடாது என்றுதான் எச்சரிக்கப்படுகிறது. அப்படி இருக்க இயர் போன் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை நாம் புறக்கணித்து விட முடியாது.