சமூக வலைதளமான X விரைவில் அனைத்து பயனர்களுக்கும் சிறிதளவிலான மாதாந்திர கட்டணத்தை நிர்ணயிக்கும் என எக்ஸின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க் சமீபத்திய உரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், லோகொ மாற்றம், ஊழியர்கள் குறைப்பு, பணம் கொடுத்து பிரீமியம் அக்கவுண்ட் உள்ளிட்ட பல மாற்றங்களை செய்தார். மேலும் அடுத்தக்கட்ட நகர்த்தலுக்காக ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்யும் வசதி என ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கக்கூடிய இடமாக எக்ஸை மாற்றும் அவருடைய இலக்கை நோக்கி பயணித்து வருகிறார்.
இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் உடனான சமீபத்திய உரையாடல் ஒன்றில் போட்ஸ் கணக்குகளை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, அனைத்து பயனாளர்களுக்கும் மாதாந்திர கட்டணம் என்பதை கொண்டுவர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
X தலைமை நிர்வாகி எலான் மஸ்க் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவருக்கும் இடையேயான உரையாடல் ஆனது எக்ஸில் லைவ் ஸ்டிரீம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நடைபெற்ற இந்த உரையாடலில் செயற்கை நுண்ணறிவான AI குறித்து நிறைய விவாதிக்கப்பட்டது.
இந்த உரையாடலில் ஆன்லைனில் அதிகமாக யூத எதிர்ப்பு செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய இஸ்ரேல் பிரதமர், அதனை தடுத்து நிறுத்தும் வழி குறித்த கேள்வியையும் முன்வைத்தார். அதற்கு பதிலளித்து பேசிய எலான் மஸ்க், டிவிட்டரில் நிறைய போட்ஸ் அக்கவுண்ட்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி அனைத்து பயனர்களுக்கும் மாதாந்திர கட்டணம் என்பதை அறிமுகப்படுத்துவது தான் என்று கூறினார். விரைவில் அதற்கான முன்னெடுத்தலை எக்ஸ் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
போட்ஸ் என்பது மனிதர்களைக் காட்டிலும் கணினி நிரல்களால் இயக்கப்படும் கணக்குகளாகும். X-ல் இவை பொதுவானவை, இந்த கணக்குகள் தங்களுக்கு சாதகமான அரசியல் செய்திகள் அல்லது குறிப்பிட்ட விசயங்கள் சார்ந்து வெறுப்புகளை பரப்ப பயன்படுத்தப்படுகின்றன.