அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் மைக்ரோசிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் பொருத்துவதற்கு ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவழித்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம்.
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள த்ரீ ஸ்கொயர்ஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் ஆச்ஸஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு இது பெரிதும் பயன்படுகிறது. மேலும் கேன்டீன்களில் உணவு பெறுவதற்கு கூட இந்த சிப் பயன்படுத்தப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் அந்த மைக்ரோசிப்களில் ஊழியர்களை கண்காணிக்கும் நோக்கத்திற்காக ஜிபிஎஸ் வசதியை பொருத்த முயற்சி செய்து வருகிறது. அலுவலங்களில் ஐடி கார்டுகள் மறைந்து கைரேகை பயன்பாட்டில் உள்ள நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் தற்போது மைக்ரோ சிப் பயன்பாடுகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன.
ஸ்வீடனில் உள்ள பயோஹாக்ஸ் என்ற சர்வதேச தயாரிப்பு நிறுவனம் அரிசி அளவிற்கு இந்த சிப்களை தயாரித்துள்ளது. மைக்ரோசிப்கள் Radio Frequency Identification (RFID) தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகின்றன. ஊழியர்களின் கட்டை விரலில் இந்த சிப் பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு சிப் பொருத்துவதற்கும் 300 டாலர் செலவாகும் என பயோஹாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனை முயற்சியாக முதலில் 50 ஊழியர்களுக்கு மட்டும் இந்த மைக்ரோ சிப்கள் பொருத்தப்பட்டுள்ளன.