யூடியூப், சந்திரயான் 3 file image
டெக்

நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3-ஐ இமைக்காமல் உற்றுநோக்கிய கண்கள்: யூடியூப் நேரலையில் உலக சாதனை!

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய நேரலை நிகழ்வு, யூடியூப் தளத்தில் உலக சாதனை படைத்துள்ளது.

Prakash J

விண்ணில் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நேற்று (ஆகஸ்ட் 23) மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றதுடன், அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. இத்தகைய செயல் உலக நாடுகளை இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

chandrayaan 3

இந்த நிலையில், சந்திரயான்3 தரையிறக்க நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பானது. அதில் யூடியூப் தளத்தில் மட்டும் அதிக பார்வையை பெற்று, அது உலக சாதனையாகவும் அமைந்துள்ளது. யூடியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நேரலை வீடியோ என்ற சாதனையை ’சந்திரயான்3 தரையிறக்க நிகழ்வு’ படைத்துள்ளது.

’சந்திரயான்3 தரையிறக்க நிகழ்வை, நேற்று மாலை 5.20 மணி அளவில் இருந்து நேரலை ஒளிபரப்பை இஸ்ரோ தொடங்கியது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளம், இஸ்ரோ இணையதளம் மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்த நிகழ்வு ஒளிபரப்பானது. அதோடு இந்தியா உட்பட உலக நாடுகளின் செய்தி நிறுவனங்களும் இதை நேரலையில் ஒளிபரப்பின. இதில் யூடியூப் தளத்தில் மட்டும் நேரலை நிகழ்வை சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது உச்சபட்ச பார்வையின் எண்ணிக்கையாக உள்ளது. மேலும், இது உலக அளவில் யூடியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நேரலை வீடியோவாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் யூடியூப் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பான வீடியோக்களில் ‘கால்பந்து உலகக் கோப்பை 2022’ தொடரின் பிரேசில் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 61 லட்சம் பார்வையை அதிகபட்சமாக பெற்றிருந்தது. அதே தொடரில் பிரேசில் மற்றும் தென்கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 52 லட்சம் பார்வையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.