Chandrayaan-3 ISRO
டெக்

சந்திரயான் 3 எடுத்த பூமி - நிலாவின் புகைப்படங்கள்! என்ன ஸ்பெஷல்?

லெண்டர் கிடைமட்ட கேமரா எடுத்த துல்லியமான நிலவின் புகைப்படத்தில் 120 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பைதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட ஓசினஸ் ப்ரோசெல்ரம், அரிஸ்டார்டிரஸ் பள்ளம், ராமன் பள்ளத்தாக்கு போன்றவை தெளிவாக தெரிகின்றன.

PT WEB

சந்திரயான் 3 விண்கலம் பூமியையும் நிலவையும் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் தரையிறங்கக்கூடிய லேண்டரில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில், 120 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பைதாகரஸ் பள்ளம் முதல் எரிமலைகளால் ஏற்பட்ட சமவெளிகள் வரை துல்லியமாக காணமுடிகிறது.

முன்னதாக நேற்று மதியம் 1:30 மணி அளவில் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இரண்டாவது முறையாக 4,313 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து 1,347 கிலோ மீட்டர் என்கிற உயரத்திற்கு குறைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நிலவின் ஈர்ப்பு விசையில் சந்திரயான் விண்கலம் சுற்றி வரும் நிலையில் சந்திரயான் எடுத்த இரண்டு புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டரில் அடிப்பகுதியில் இருக்கும் கிடைமட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒரு புகைப்படம், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நிலவின் மேற்பரப்பில் இருந்து 18,000 முதல் 10,000 கிலோமீட்டர் உயரத்திலிருந்து இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

லெண்டர் கிடைமட்ட கேமரா எடுத்த துல்லியமான அந்த நிலவு புகைப்படத்தில் 120 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பைதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட ஓசினஸ் ப்ரோசெல்ரம், அரிஸ்டார்டிரஸ் பள்ளம், ராமன் பள்ளத்தாக்கு போன்றவை தெளிவாக தெரிகின்றன. லேண்டரின் இந்த கிடைமட்ட கேமராவை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் "எலக்ட்ரோ ஆப்டிக் சிஸ்டம்" உருவாக்கியுள்ளது.

இஸ்ரோவால் வெளியிடப்பட்ட மற்றொரு புகைப்படம் சந்திரயான் லேண்டரில் முன்பகுதியில் உள்ள இமேஜிங் கேமரா மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம். அகமதாபாத்தில் உள்ள "ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர்" உருவாக்கியுள்ள லேண்டரின் இமேஜிங் கேமராவில் AI மூலமாக இமேஜ் பிராசசிங் செய்யும் என கூறப்படுகிறது. லேண்டரின் இந்த இமேஜிங் கேமரா, கடந்த 14 ஆம் தேதி (சந்திராயன் விண்கலம் பூமியின் மேற்பரப்பில் இருந்தபோது) இப்புகைப்படத்தை எடுத்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் கடந்த 26 நாட்களுக்கும் மேலாக பூமியிலிருந்து நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் லேண்டெர் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விஞ்ஞானிகள் வகுத்த திட்டத்தின்படி தற்போது சந்திரயான் விண்கலம் சிறப்பாக செயல்படுவதாக இஸ்ரோ தெரிவிக்கிறது. அதற்கு சாட்சியாக சந்திரயான் விண்கலத்தில் உள்ள கேமரா மற்றும் சென்சார் மூலம் எடுத்த புகைப்படங்களின் தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.