தமிழ்நாடு

தொடர்ந்து அரங்கேறிய திருட்டு சம்பவங்களுக்கு ‘எண்டு கார்டு’ போட்ட கிராமத்து இளைஞர்கள்

தொடர்ந்து அரங்கேறிய திருட்டு சம்பவங்களுக்கு ‘எண்டு கார்டு’ போட்ட கிராமத்து இளைஞர்கள்

webteam

பென்னாகரம் அருகே தொடர்ந்து நடைபெற்று வந்த திருட்டு சம்பவங்களுக்கு முடிவு கட்டும் வகையில் கிரமாத்து இளைஞர்கள் செய்த செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சி.புதூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பென்னாகரம் பிரதான சாலையில் பி.அக்ரகாரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து போலம்பட்டி, அரிச்சந்திரனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல, சி.புதூர் கிராமத்தின் வழியாகவே செல்ல வேண்டும்.
 பென்னாகரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்த வண்ணம் இருந்தது. 

இதுதொடர்பாக பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், காவல் துறையினர் கண்டறிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனை தடுக்கு வழியில்லாமல் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். 

இந்நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அக்னி சிறக்குகள் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் ஒன்று கூடி, இந்த திருட்டு சம்பவங்களை தடுக்க கிராமத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்தனர். இதற்கான செலவிற்காக தங்கள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வசதி வாய்ப்புள்ளவர்களிடம் நிதியை திரட்டி சுமார் ரூ.50,000 செலவில் கிராமத்தின் நுழைவாயில் உள்ளிட்ட முக்கியமான மூன்று சந்திப்புகளில் 5 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். 

இதனை காண்காணிக்க, அக்னி சிறகுகள் நற்பணி மன்றத்தின் மூலம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் ஒரு கணினியை வைத்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு கேமரா பொருத்தியதிலிருந்து திருட்டு சம்பவம் முழுவதுமாகக் குறைந்துவிட்டதாகவும் தற்போது அச்சமில்லாமல் வாழ்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதை மற்ற கிராமங்களில் பயன்படுத்தினால், நம்மை நாமே பாதுகாத்து கொள்ள முடியும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.