கோயம்புத்தூர் விபத்து ட்விட்டர்
தமிழ்நாடு

அனுமதியின்றி வைக்கப்பட்ட வேகத்தடையால் பறிபோன உயிர்.. மாநகராட்சி எச்சரிக்கை!

கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வேகத்தடையில் நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

PT WEB

கோவை கொடிசியா அருகே உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் மாநகராட்சிக்குட்பட்ட சாலையில் அனுமதி பெறாமல் அமைத்த வேகத்தடையில், தடுமாறி விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற சந்திரகாந்த் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாய்மொழியாகக்கூட அனுமதி பெறாமல் பள்ளி நிர்வாகம் வேகத்தடை அமைத்தது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத்தடை அமைப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது.

வேகத்தடை அமைப்பதற்கு உரிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து மாநகராட்சி நிர்வாகமே வேகத்தடையை அமைத்து தரும் எனவும், தனியார் எவரேனும் வேகத் தடை அமைத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.