பழைய வண்ணாரப்பேட்டையில் போலீஸ் வேனில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிட்ட சட்டக் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வாகனத்தில் அத்துமீறி ஏறி பயங்கர ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்குவது போல வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட முதலாம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவன் மற்றும் புகைப்படக் கலைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் CSF படை போலீசார் புதுவண்ணாரப் பேட்டை துறைமுக பொறுப்புக் கழக குடியிருப்பு பகுதியில் தங்கி வருகின்றனர்.
புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் ஓட்டுநராக பணிபுரியும் நவீன் குமார் என்பவர் தினந்தோறும் காவல் வாகனத்தில் CSF போலீசாரை அழைத்துச்சென்று உயர்நீதிமன்றத்தில் இறக்கிவிட்டு மீண்டும் துறைமுக பொறுப்புக் கழகம் குடியிருப்பு வளாகத்தில் காவல் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு சென்றுவிடுவார்.
அப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வாகனத்தில் 4 இளைஞர்கள் ரவுடி போன்று வேடமணிந்து வாகனத்தில் இறங்கி வருவது போன்றும், காசிமேடு மீன்பிடி துறைமுக பழைய வார்ப்பு பகுதியியைச் சேர்ந்த ரவுடி சந்தானம் கதாபாத்திரத்தில் இளைஞர் ஒருவர் கத்தி எடுத்து ரவுடி கும்பலை வெட்டி கொலைசெய்வது போன்றும் காட்சிப்படுத்தி வீடியோ பதிவுசெய்து அது உண்மை என்று பொதுமக்களை நம்ப வைக்கும்படியாக இன்ஸ்டாகிராம் மூலம் பதிவ செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் காவல் வாகன ஓட்டுநர் நவீன் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் பதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது Sanju pa official இன்ஸ்டாகிராம் ஐடி யை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் விக்னேஷ், மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் சஞ்சய் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பின்னர் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.