தமிழ்நாடு

இணை நோய்கள் இல்லாத 33 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு - 26, 28, 32, 35, 37 வயது இளைஞர்கள் பலி

இணை நோய்கள் இல்லாத 33 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு - 26, 28, 32, 35, 37 வயது இளைஞர்கள் பலி

Sinekadhara

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

‌‌‌‌‌‌தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய்ப் பரவல் மிக வேகமாக உள்ளது. 24 மணி நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 30 பேர் உட்பட 19 ஆயிரத்து 588 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 625 சிறார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அன்று 128 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து 9ஆவது நாளாக சிறார்களின் தினசரி பாதிப்பு 500ஐ கடந்து பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 11 லட்சத்து 86 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 17 ஆயிரத்து164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 746 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 147 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 829 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 445 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 257 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 812 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 779 பேரும், மதுரை மாவட்டத்தில் 711 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 92 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 55 பேரும் உயிரிழந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 33 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதில் திருவள்ளூரைச் சேர்ந்த 26 வயது, திருவண்ணாமலையை ச் சேர்ந்த 28 வயது, ஈரோட்டைச் சேர்ந்த 32 வயது, திருப்பத்தூரைச் சேர்ந்த 35 வயது, நெல்லையைச் சேர்ந்த 37 வயது இளைஞர்கள் இணை நோய்கள் இல்லாமல் கொரோனாவால் உயிரிழந்தனர்.