தமிழ்நாடு

ஆசிரியரை கத்தியால் மிரட்டி மாணவியை கடத்த முயற்சி - இளைஞருக்கு தர்ம அடி

ஆசிரியரை கத்தியால் மிரட்டி மாணவியை கடத்த முயற்சி - இளைஞருக்கு தர்ம அடி

webteam

கன்னியாகுமரியில் 10ஆம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் புகுந்து கடத்த முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கி அடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ரணியல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வந்த ஜெயராம் (23) என்ற இளைஞர், 10ஆம் வகுப்பறையில் நுழைந்து மாணவி ஒருவரின் தந்தை இறந்துவிட்டதாகவும், அந்த மாணவிய அழைத்துச் செல்ல வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த இளைஞர் மீது சந்தேகம் அடைந்த ஆசிரியர் ‘நீங்கள் யார் ?’ என கேள்வி எழுப்பியுள்ளார். உடனே அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை ஆசிரியரின் கழுத்தில் வைத்து மிரட்டி, மாணவியை அழைத்துச்செல்ல முயன்றுள்ளார். ஆசிரியர் கூச்சல் போடவே, பள்ளியில் பணிபுரிந்து ஊழியர்கள் ஓடி வந்துள்ளனர். 

அவர்களை கண்டதும் அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். ஆனால் சாலையில் அந்த நபரை மடக்கிப்பிடித்த மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் கத்தியுடன் அந்த இளைஞரை ரணியல் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரை கைது செய்த காவல்துறையினர், அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அந்த நபர் கர்நாடகாவின் குடகு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அந்த இளைஞர் இதே மாணவியை கடந்த ஜூன் மாதம் குடகுப் பகுதி கடத்திச் சென்றதும், அப்போது கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. தற்போது ஜாமீனில் வெளிவந்த அந்த நபர் மீண்டும் அந்த மாணவியை கடத்த முயன்றுள்ளார். அந்த மாணவியை அவர் ஃபேஸ்புக் மூலம் காதலித்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.