தமிழ்நாடு

திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!

திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!

Sinekadhara

மேட்டுப்பாளையத்தில் திருமணமான ஆறே மாதத்தில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து வருவாய் கோட்டாச்சியர் நேரில் சென்றூ விசாரணை நடத்திவருகிறார். 

மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியைச் சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30) இவரது மனைவி ராசி (வயது 27). இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. ராசி கடந்த 2020ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேற்கொண்டு பி.ஜி படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (19 ம் தேதி) மருத்துவர் ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்டநேரம் ஆகியும் ராசி இருந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவரது தாயார் டாக்டர் செந்தாமரை (இவரும் மருத்துவர்) மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கதவு உள்பக்கம் தாழிட்டிருந்ததால் அருகில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்தபோது ராசி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் அறைக்கதவை உடைத்து மருத்துவர் ராசியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர் ராசியின் தற்கொலைக்கு நீட் தேர்வு குறித்த அச்சமே காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருமணமான 6 வது மாதத்தில் பெண் மருத்துவர் ராசி தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று மேட்டுப்பாளையம் வந்த கோவை வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உடற்கூறு ஆய்வுக்காக ராசியின் உடல் வைக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது விசாரணையை துவக்கினார். ராசியின் குடும்பத்தாரிடம் அவரது தற்கொலை குறித்து விசாரிக்கப்பட்டது. இளம் பெண் மருத்துவரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்னை காரணமா அல்லது நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டதால் தேர்வு அச்சம் காரணமா என்ற இரு வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.