தமிழ்நாடு

“மேகதாது அணை தமிழ்நாட்டை பாதிக்காது” - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

“மேகதாது அணை தமிழ்நாட்டை பாதிக்காது” - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

Sinekadhara

மேகதாது அணை விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. மேலும் பிரதமர் சந்திப்பின்போதும் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “மேகதாது அணை கட்டுவதன்மூலம், தமிழகம், கர்நாடகா என இரு மாநிலமும் பயன்பெறும். மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகளும் அதிகாரிகள் முன்னிலையில் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம். மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.  அதேசமயம், குந்தா மற்றும் சிலஹல்லா என்ற இரண்டு நீர்மின் திட்டங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டங்களுக்கு கர்நாடக அரசின் ஒத்துழைப்பையோ, அனுமதியையோ தமிழக அரசு கோரவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெங்களூரு நகரத்தின் குடிதண்ணீர் வசதிக்காகவே உச்ச நீதிமன்ற அனுமதியின்படி மேகதாது அணை கட்டப்படுகிறது என்றும், எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் எடியூரப்பா கோரியுள்ளார்.