தமிழகத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு 2019ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்ற அந்த மாநாட்டில், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில், இதுவரை 62 ஆயிரத்து 738 கோடி மதிப்பிலான 61 நிறுவனங்களின் முதலீடுகள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 96 ஆயிரத்து 341 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதல் மாநாட்டுக்குக் கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து, 2வது உலக முதலீட்டாளர் மாநாடு இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டை நடத்துவதற்கென 75 கோடி ரூபாயை முதலமைச்சர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக சமீபத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த ஆலோசனையின் அடுத்த கட்டமாக இன்று, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.