தமிழ்நாடு

“ஆவணங்களைக் கொடுத்து பொள்ளாச்சி வழக்கை வலுப்படுத்துவோம்” - பெண்கள் குழு பேட்டி

“ஆவணங்களைக் கொடுத்து பொள்ளாச்சி வழக்கை வலுப்படுத்துவோம்” - பெண்கள் குழு பேட்டி

webteam

பாலியல் கொடூரங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்காவே தங்கள் அமைப்பு நடத்தப்படுவதாக பெண்கள் நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக பல அமைப்புகள் குரல் கொடுக்க முன்வந்துள்ளன. அந்த வகையில் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பெண்கள் நிபுணர் குழுவினர் செய்தியாளர்களை சென்னையில் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, பேராசிரியர் வசந்தி தேவி, வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் உள்ளிட்டோர் பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், “பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்காக தான் இந்த அமைப்பு இருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து தகவல்களை சொன்னால் முற்றிலும் ரகசியமாக வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐ நடத்தும்போது ஆவணங்களைக் கொடுத்து வழக்கை வலுப்படுத்துவோம். பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம்” என்று தெரிவித்தனர்.