செஞ்சி அருகே கணவர் இறந்ததால், மனவிரக்தியில் இருந்த அரசு செவிலியர் தன் பெண் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நேமூர் பகுதியை சேர்ந்த சரசு(33) என்பவருக்கு, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த விளாங்குடி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(34) என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் சென்னையில் உள்ள தனியார் கார் கம்பெனியிலும், சரசு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவரும் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இதனிடையே கார்த்திகேயன், தான் வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதிலிருந்து அவருடைய மனைவி சரசு, மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன் அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தாய் வீட்டிலேயே தன் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார் சரசு.
இந்நிலையில் நேற்று அதிகாலை தன் பெண் குழந்தை வைஷாலி(6) உடன் அருகில் இருந்த கிணற்றுக்குச் சென்று, தன் குழந்தையை தன்னுடன் சேர்த்து துணியால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து சரசு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கஞ்சனூர் போலீசார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர் இறந்த சோகம் தாங்காமல் அரசு செவிலியர் சரசு தன் 6 வயது பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)