வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவ பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைகாலமாக குடும்பத் தகராறு, நிலப்பிரச்னை, சொத்து பிரச்னை என பல்வேறு காரணங்களை கூறி பல்வேறு தரப்பினர் ஆங்காங்கே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயல்வதும் பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் பலர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் எதிரே பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் அடுத்த மொனவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்னர், தீடீரென கைகளில் வைத்திருந்த எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், தனக்கு பிறந்த 3 குழந்தைகள் தன்னுடைய குழந்தைகள் இல்லை என்று கூறி கணவர் குமார் தன்னை துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சத்துவாச்சாரி காவல்நிலையத்திற்கு பெண் மற்றும் குழந்தைகளை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.