திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சீனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் காட்ரம்பாக்கம் கிராமத்தில் 10 கிரவுண்ட் வீட்டு மனை உள்ளது. கடந்த 2018-ல் சென்னையைச் சேர்ந்த விஜய் என்பவருக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்றதாகவும், அதனைத் தொடர்ந்து மேலும் கூடுதலாக நிலம் வாங்கிக் கொண்டு பணம் தராமல் விஜய் ஏமாற்றியதோடு மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜயை தவிர ராஜேஷ், அருளானந்தம், பாலகுமாரன் ஆகிய நான்கு பேரும் கூடுதலாக நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொண்டதாக ராஜேஸ்வரி கூறுகிறார். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நான்கு பேரும் சேர்ந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் வழக்குகளை விரைந்து முடித்து இடத்தையோ அல்லது அதற்குரிய பணத்தையோ மீட்டுத் தர வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் ராஜேஸ்வரி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த காவலர்கள் விரைந்து அவரை மீட்டு முதலுதவி செய்தனர். இதைத்தொடர்ந்து தற்போது வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.