புதுக்கோட்டை அருகே பெண் ஒருவர் அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 67 நாட்களுக்கு பிறகு 50 சதவீத அரசு பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 9 பணிமனைகளிலிருந்து 192 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆலங்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பேருந்தின் மீது கல்லை வீசினார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியது, பின்னர் அந்த பெண் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள் மாற்று பேருந்தில் மாற்றி விடப்பட்டனர். பேருந்து மீது கல் வீசியவர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும், நீண்ட நாட்களாக புதுக்கோட்டை பகுதிகளில் சுற்றித் திரிவதாகவும் அவர் அவ்வப்போது கட்டை, கம்புகள், கல் உள்ளிட்டவற்றை கொண்டு சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகம் அந்தப் பெண்ணை மீட்டு மனநல காப்பகத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.