சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் வார்டு தமிழக அரசு சார்பில் இயங்கி வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் ஆலப்பாக்கத்தை சேர்ந்த செல்வி (48) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 1ஆம் தேதி அந்த மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்று அவர் கூறி வந்த நிலையில், இன்று வெளியே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது 4 து மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததால் உடலில் பலத்த காயம் ஏற்பட்ட அவர், மயங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் செல்வியை மீட்டு அருகில் உள்ள தனியார் மற்றும் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்த போது, அவரது மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மையத்தில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.