விழுப்புரத்தில் மூதாட்டியை ஏமாற்றி வங்கிக்கணக்கில் இருந்து ரூ.5.65 லட்சத்தை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த காணை அருகே உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மனைவி வடமலை. இவர், கடந்த மார்ச் 9 ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.,மில் தனது வங்கி கணக்கின் இருப்புத்தொகை விவரத்தை காணச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர், வடமலைக்கு உதவும் வகையில் அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி இருப்புத்தொகையை தொகையை காண்பித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து வடமலை ஒருமாதம் கழித்து வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து சிறுக, சிறுக ரூ.5.65 லட்சம் எடுத்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வடமலை இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ஏ.டி.எம்., உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அந்தப்பதிவில் வடமலையிடம் இருந்து ஏடிஎம் யை வாங்கிய அந்தப் பெண், வாங்கிய ஏடிஎம்மிற்கு பதிலாக மாற்று ஏடிஎம்மை கொடுத்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மூதாட்டியின் ஏடிஎம்யை பயன்படுத்தி பணத்தை திருடிவந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்தை திருடியது திருச்சி மாவட்டம் கூத்துார் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி சீத்தாலட்சுமி(43) என்பதும் இது போன்ற பல குற்றச்சாட்டுகளில் அவர் மீது பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 108 கிராம் தங்க நகைகள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.