தமிழ்நாடு

வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மாலை முதல் மதுக்கடைகள் மூடல்

வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மாலை முதல் மதுக்கடைகள் மூடல்

rajakannan

சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலை முதல் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 38 இடங்களில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, மீதமுள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதி இடத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதோடு, நாடாளுமன்ற தேர்தலின் போது, சர்ச்சைக்குள்ளான 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், பிரச்சாரம் முடிவடைந்ததும் 4 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள், மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தேர்தல் அதிகாரிகள், தேர்தல் டிஜிபி, காவல் கண்காணிப்பாளர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள். 

மேலும், சத்யபிரதா சாஹூ பேசுகையில், “தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து  இதுவரை தமிழகத்தில் ரூ156.86 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 தொகுதிகளில் உள்ள மதுகடைகளை இன்று மாலை முதல் வாக்குப்பதிவு நேரம் முடியும் வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுவாக்குப் பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். 

அத்துடன், அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.