தமிழ்நாடு

‘கெத்து’ தமிழ்சொல்தான் என்றதற்கு வாழ்த்துகள் - திமுக  எம்பி வில்சன்

‘கெத்து’ தமிழ்சொல்தான் என்றதற்கு வாழ்த்துகள் - திமுக  எம்பி வில்சன்

rajakannan

‘கெத்து’ , ‘வச்சு செய்வேன்’ என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது என அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “ஒரு மொழிக்கு ஆதாரம் என்பது சொற்கள். ‘கெத்து’ , ‘வச்சு செய்வேன்’ என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது. இளைஞர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அதனை தற்போது பயன்படுத்துகிறார்கள்” என்றார்.

இந்நிலையில், திமுக மாநிலங்களவை எம்பி வில்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கெத்து தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி உதயநிதி ஸ்டாலின்  படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு மறுத்த அதிமுக அரசு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கெத்து தமிழ் வார்த்தை தான் என்று கண்டுபிடித்துள்ளது! வாழ்த்துகள்! இதைதான் நான் வாதாடி 2016-ல் உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்தது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு உதயநிதி நடிப்பில் வெளிவந்த படம் ‘கெத்து’. கெத்து தமிழ்ச் சொல் இல்லை எனக்கூறி இப்படத்திற்கு அரசின் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. தமிழ் அகராதியில் கெத்து என்ற சொல் உள்ள பக்கத்தைத் ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் பதிவிட்டு உதயநிதி ஸ்டாலின் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.. இது தொடர்பாக படக்குழு சார்பில் வரிவிலக்கு அளிக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் கெத்து தமிழ் சொல்லே என்பதை உறுதிசெய்து வரிவிலக்கு அளிக்க உத்தரவிட்டது.