தமிழ்நாடு

பரவலாக பெய்த மழை.. மகிழ்ந்து போன மக்கள்..!

பரவலாக பெய்த மழை.. மகிழ்ந்து போன மக்கள்..!

Rasus

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தானிய பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. வறட்சி‌ ஏற்பட்டு சம்பா பயிர்கள் கருகிய நிலையில், உளுந்து பயிர் சாகுபடியும் மழையினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

இதேபோல திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகள் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கி போக்கு‌வரத்து பாதிக்கப்பட்டதால் சில இடங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர். இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.