தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஏன்? - பேரவையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஏன்? - பேரவையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கலிலுல்லா

இஸ்லாமிய, இலங்கை தமிழர்களை வஞ்சித்து, நாட்டை துண்டாட நினைக்கும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏன் சட்டத்தை எதிர்க்கிறோம் என்பதற்கு விளக்கம் அளித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், ''குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதரின் சட்டப்பூர்வமான உரிமை. இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக்கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்கிட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவின் படி, இந்திய நிலப்பரப்புக்குள் எந்த குடிமகனுக்கும் சட்டப்படியான சமத்துவம், பாதுகாப்பு ஆகியவற்றை அரசு மறுக்க முடியாது. 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின்படி, குடியுரிமை பெற மதம் ஒரு அடிப்படையாக இல்லை.

ஆனால், ஒன்றிய அரசு கொண்டுவந்த திருத்ததில் மதத்தை அடிப்படையாக மாற்றுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்கிறது. அதன்படி பார்க்கும்போது, மதத்தை அடிப்படையாக கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டுவர முடியாது. அதனால்தான் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டியிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 19 ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சிஏஏ என பெயரிடப்பட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சீக்கள், கிறிஸ்துவர்கள் ஆகியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இதில் தவிர்க்கப்பட்டுள்ளனர். மக்களை மத ரீதியாக பிரிக்கிறது என்பதால் இதனை தொடக்கத்திலேயே திமுக எதிர்த்தது. இந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது என்ற காரணத்தால் எதிர்ப்பை தெரிவித்தோம்.

அகதிகளாக வருவோர்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும். மத ரீதியிலோ, இனரீதியிலோ அவர்களை பிரித்து பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும். வாழ்க்கையை இழந்து சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அவர்களுக்கு நன்மை செய்வது ஆகாது. அவர்களை மேலும் துன்புறுத்தும் செயல்.

இந்த சட்டத்தின்மூலம் இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் இந்த சட்டம். ஒன்றிய அரசு இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படாமல் வஞ்சனையோடு செயல்படுகிறது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா இருப்பதற்கு காரணம், வேற்றுமையில் ஒற்றுமை தத்துவம் தான். மதம், இனம், மொழி வேற்றுமைகளை கடந்து எல்லோரும் இந்தியர்கள் என ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகிறோம். இதனை ஊறுவிளைவிக்கும் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தம் தேவையற்றது. இதன் நீட்சியாக என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்'' என்று தெரிவித்தார்.