தமிழ்நாடு

என்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணமா? மோசடி நபர் மீது பெண் புகார்!

என்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணமா? மோசடி நபர் மீது பெண் புகார்!

webteam

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக 13 ஆண்டுகளாக காதலித்து ரூ.68 லட்சம் வரை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்து முயன்ற நபர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் பெண் (27) ஒருவர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே உடன் படித்த நிஷாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலித்த போது நிஷாந்த் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பலமுறை திருமணம் செய்து கொள்ள கேட்டும் நிஷாந்த் பல்வேறு காரணங்களைக் கூறி தவிர்த்து வந்துள்ளார். இதனிடையே எனது தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவி செய்தால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார் என அந்தப் பெண்ணிடம் நிஷாந்த் கூறியுள்ளார். இதற்கு நிஷாந்தின் பெற்றோர் சுதர்ஷ்ன, ஜெயந்தி ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டு தனது மகனை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி சுமார் ரூ.68 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து நிஷாந்திற்கு தொழிலதிபர் மகளுடன் திருமணம் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றுப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், தனது நண்பர்கள் மூலம் விசாரித்துள்ளார். அப்போது நிஷாந்த், வெளி நாடுகளில் முதலீடு செய்வதாக கோடிக்கணக்கில் மோசடி செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதற்கும், பண மோசடி செய்த நிஷாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து விருக்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் நிஷாந்தின் தந்தை சுதர்சன், ஜெயந்தி ஆகியோரை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையிலர், நிஷாந்திற்கு பிரபல தொழிலதிபரின் மகளுடன் திருமணம் நடைபெறவிருந்தது. இதைத் தொடர்ந்து  வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருந்தது. தற்போது காதலன் மீது காதலி அளித்துள்ள புகாரால் நிஷாந்திற்கு நடைபெறவிருந்த திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியுள்ளனர். இந்த புகார் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.