தமிழ்நாடு

"இலங்கையில் யார் அதிபரானாலும் தமிழர்களுக்கு விரோதமாகவே இருப்பார்கள்" - வைகோ

"இலங்கையில் யார் அதிபரானாலும் தமிழர்களுக்கு விரோதமாகவே இருப்பார்கள்" - வைகோ

Veeramani

இலங்கையில் யார் அதிபராக வந்தாலும் அங்குள்ள தமிழர்களுக்கு விரோதமாகவே இருப்பார்கள் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக சென்னை தியாகராயநகரில், தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. அதில் வைகோ மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய வைகோ, இலங்கை தமிழர் பிரச்னையில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டுமென ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் பேசியது தனது வாழ்நாள் சாதனையாக நினைப்பதாக கூறினார்.

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காததால் மக்கள் நாள்தோறும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் கடந்த நவம்பர் மாதம் முதல் டீசலை இறக்குமதி செய்யமுடியாமல் இலங்கை தவிக்கிறது. கையிருப்பிலுள்ள எரிபொருள் இம்மாத இறுதிக்குள் தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டிற்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இதோடு மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் இலங்கையின் நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அவசரகால உயிர்காக்கும் சிகிச்சைகள் மட்டுமே தற்போது வழங்கப்படும் நிலையில், இன்னும் சில நாட்களில் அவசர சிகிச்சைகளைக்கூட மேற்கொள்ள முடியாத அளவுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என்று இலங்கை தேசிய மருத்துவக்கழகம் எச்சரித்துள்ளது.



இந்த சூழலில் இலங்கையில் அதிபர் கோட்டபய ராஜபக்சவுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று இலங்கையில் நாடாளுமன்றம் கூடியிருந்த நிலையில், அதன் அருகே திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானோர் கோட்டபய ராஜபக்ச அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு முழுப் பொறுப்பேற்று கோட்டபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.