தமிழ்நாடு

“தடையை மீறி வெளியே சுற்றினால் பைக் பறிமுதல்” - சென்னை கமிஷனர் எச்சரிக்கை

“தடையை மீறி வெளியே சுற்றினால் பைக் பறிமுதல்” - சென்னை கமிஷனர் எச்சரிக்கை

webteam

ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் நபர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை ஆணையர் எச்சரித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். நிறைய பேர் இன்று பைக்கில் சாலைகளில் செல்வதை பார்க்க முடிவதாகவும், அத்தியாவசியப் பொருட்களை வாங்கப்போவதாக கூறுவதாகவும் தெரிவித்தார். ஆனால், தங்கள் பகுதியில் அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்து இருக்கும் போது ஏன் விதிமுறைகளை மீறவேண்டும் என அவர் கூறினார்.

ஒரு சிலர் தடை உத்தரவை மீறுவதால் பிரச்சினையாக இருப்பதாகவும், தேவையில்லாமல் பைக்கில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தடையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், வீட்டு கண்காணிப்பில் இருந்து வெளியே சென்ற 4 பேர் மீது சென்னையில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வீட்டில் கண்காணிப்பில் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்து பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், வாகனங்களில் செல்பவர்கள் அடையாள அட்டைகளை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் கூரினார்.

 சென்னை பெருநகர காவல் எல்லைகளில் 10 சோதனை சாவடிகளை அமைத்துள்ளோம் என்றும், வெளியே இருந்து யாரும் உள்ளே வர முடியாது என்று தெரிவித்தார். இதேபோன்று உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லமுடியாது என்றும் அதற்கு தடை விதித்துள்ளோம் என்றும் கூறினார். சாலைகளில் அத்துமீறி பைக்கில் செல்லும் இளைஞர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கையுடன் பைக் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.